#2977 to #2981

#2977. எல்லாம் அவன் செயல் என்று இருமின்!

உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்
செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்
கைவளம் இன்றிக் கருக்கடந் தேனே.

முன்னைப் பிறவிகளில் சரியை,கிரியை போன்ற நெறிகளின் நான் நின்றிருந்தேன்.என்னை அந்த நெறிகளில் இருந்து மீட்டான் சிவன். என்பால் வள்ளல் போலக் கருணை காட்டினான் சிவன். அவன் அன்பின் திறத்தைப் பாராட்டினேன். “நான் செய்கின்றேன்!” என்ற எண்ணத்தைத் துறந்து “அவன் என்னைச் செய்விக்கின்றான்!” என்ற எண்ணம் பிறந்ததால் வினைகளையும், வினைப் பயன்களையும் நான் ஓருசேர ஒழித்து விட்டேன்!

#2978. பூண்டாள் புவன சூடாமணி

மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
தூண்டா விளக்கின் தகளிசெய் சேர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி
மாண்டான் ஒருவன்கை வந்தது தானே.

உலகக் கவர்ச்சியில் இருந்து மீண்டவர், தம் மூலாதாரத்தில் உள்ள தீயை எழுப்பி, அதை மேல் நோக்கிச் செலுத்தி, சகசிரதளம் என்னும் தூண்டா விளக்கில், உணர்வு என்னும் நெய்யைச் சேர்ப்பார்கள். அங்கு ஒளி வீசவும், புவன சூடாமணி ஆகிய சக்தி தேவி அங்கு வந்து பொருந்துவாள். சீவன் தன் சுட்டறிவை இழந்து நிற்கும்! ஆனால் அரிய சிவானுபவம் பெறும்.

#2979. ஆறு அருவி பாயும் அருங்குளம்

ஆறே அருவி அகங்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலை கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.

சீவனின் சென்னியில் உள்ள சகசிரதளம் என்னும் குளத்தை, உடலின் ஆறு ஆதாரங்களின் வழியே பாய்ந்து செல்லும் அருவியாகிய உயிர்சக்தி வந்து நிரப்பும். கீழே உள்ள உயிர்சக்தியை மேல்நோக்கிச் செலுத்தும் சிவகதி மிகவும் நுண்ணியது. சீவன் பெறும் சிவகதியின் முடிவில், குவிந்த முலைகளை உடைய சக்தி தேவியுடன் அனைத்துக்கும் வேறாக இருக்கும் மேலான சிவமும் விளங்கும்.

#2980. என் பொன்மணி இறைவன் ஈசன்

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே.

இறைவன் என் மேல் காட்டிய பெருங் கருணையை எண்ணி எண்ணி நான் அன்பினால் உள்ளம் உருகுவேன்; அரற்றுவேன்; என்பு உருகுவேன்; இரவு பகல் பார்க்காமல் அவனை ஏத்துவேன்;என் பொன்மணி போன்றவன் என் ஈசன், என் இறைவன். அவனை நான் அன்பின் மிகுதியால் தின்பேன்; கடிப்பேன்; அவனை எனக்கு உரியவன் ஆக்கிக் கொள்வேன்!

#2981. மனம் விரிந்து உரை மாண்டது முத்தியே

மனம்வி ரிந்து குவிந்தது மாதவம்
மனம்வி ரிந்து குவிந்தது வாயு
மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்
மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே.

மாதவம் என்பது என்ன என்று அறிவீரா?
உள்ளம் உலகக் கவர்ச்சியில் வெளியே சென்று, விரிந்து, பரந்து, பல துன்பங்களை அடைந்து, பின்பு அடங்கி ஓடுங்குவதே உண்மையான தவம். மனம் விரிந்து பின் அடங்கியவருக்கு பிராணனும் அடங்கி விடும். கும்பக நிலை வந்து பொருந்தும். விரிந்து பின்னர் குவிந்த மனம் உயிரில் ஒடுங்கும். அப்போது மௌனம் ஓங்கும். பேச்சு இல்லாத பேரானந்தம் ஏற்படும். இதுவே சீவனின் முத்திநிலை ஆகும்.