23. வாழ்த்து

23. வாழ்த்து

#3047. வாழ்க நம் நந்தியின் திருவடிகள்!

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.

என் நந்திப் பிரானின் திருவடிகள் வாழ்க! வாழ்கவே!
என் மலக்கட்டினை அறுத்த ஈசன் திருவடிகள் வாழ்க! வாழ்கவே!
எனக்கு மெய்ஞ்ஞானம் அருளிய இறைவன் திருவடிகள் வாழ்க! வாழ்கவே!
நின்மலன், அமலன், விமலன் ஆகிய சிவன் திருவடிகள் வாழ்க! வாழ்கவே!

திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் முற்றிற்று.

திருமூலர் அருளிய திருமந்திரம் முற்றிற்று.

வையகத்துள்ளோர் வாழ்வாங்கு வாழ்க! வாழ்கவே!

அன்பே சிவம்! அன்பே சிவம்! அன்பே சிவம்!

காரணம் இல்லாத, சுயநலம் இல்லாத, தூய அன்பை நாம் வளர்ப்போம்!

அன்புக்கு மட்டுமே கட்டுப்படும் முக்தி தாயகன் சிவபிரானை அடைவோம்!

முடிவுரை

எந்தத் துணிச்சலுடன் இந்தப் பணியை மேற்கொண்டேனோ
அந்த சிவபெருமானும் சக்திதேவியும் அறிவர்! யான் அறியேன்!

எத்தனையோ தடங்கலுக்கு நடுவில் இந்தப் பணியை
மெத்தனம் இன்றி செய்ய அருளியவள் சக்தி அன்னை!

அனைத்து உலகினருக்கும் மற்றும் அனைத்து சீவராசிகளுக்கும்
அன்னை தந்தை ஆகிய உமை, சிவன் பாதங்களில் சமர்ப்பணம்!

ஓம் தத் ஸத்! ஸர்வம் சிவார்ப்பணம் அஸ்து!